கீழாநெல்லி!

தமிழர்கள் பயன்படுத்தும் பொருட்கள், உணவுகள் உட்பட பெயர்கள் அனைத்தும் காரணப்பெயராக விளங்கி வருகிறது. அந்த வகையில் இலையின் கீழ் நெல்லிக்காய் வடிவில் காய் உள்ளதால் கீழாநெல்லி என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது.

கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி, பூமியாமலக், பூளியாபாலி என்று பல்வேறு பெயர்களால் மருத்துவர்களால் அழைக்கப்படும் கீழாநெல்லி தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் தானாகவே முளைத்து செழித்து வளர்ந்திருக்கும் கற்ப மூலிகை ஆகும்.

கீழாநெல்லியினால் வயிற்று மந்தம், பித்தநோய், கண்நோய்கள் நீங்கும். கெட்டரத்தத்தை நீக்கி நல்ல ரத்தமாக மாற்றும். மதுமேகம் என்ற நீரிழிவு, மேக நோய் எனும் விந்து நட்டம் இவைகளை போக்கும்.

keezhanelli Benefits

கீழாநெல்லி ஒரு குறுஞ்செடி. மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்துள்ள இலைகள் கொண்டது. இலையின் அடியில் காய்கள் கொத்து கொத்தாய் வரிசையாய் இருக்கும். நமது நாட்டிலிருந்து ஏற்றுமதியாகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று. காமாலை நோய்க்கு கீழாநெல்லி கொடுப்பார்கள் என்பது பாமரமக்கள் கூட அறிந்ததாகும்.

கீழாநெல்லி சாறு, கரிசலாங்கண்ணிசாறு, தும்பை இலைச்சாறு, ஒரே அளவில் எடுத்து மைய அரைத்து பெரியோர்களுக்கு புன்னைக்காய் அளவும். இளைஞர்களுக்கு கழற்சிக்காய் அளவும், சிறுவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் தொடர்ந்து 10 நாட்கள் பசும் பாலில் கலந்து காரம், புளி, அரை உப்புடன் பால் மோர் ஆகியவற்றில் கலந்து கொடுத்தால் காமாலை குணமாகும்.

கீழாநெல்லியின் இளங்கொழுந்தை குடிநீரில் கலந்து குடித்தால் சீதக்கழிச்சல் தீரும். நீண்ட நாட்கள் ஆறாமல் உள்ள சிரங்குகளுக்கு இலையை மென்மையாக அரைத்து பூச அவை ஆறும்.

இலை, வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து பசுமோரில் கலந்து வடிகட்டி குடித்தால் காமாலை போகும்.

சில இளைஞர்கள் தவறான பழக்கங்களால் இளம் வயதிலேயே வயதான தோற்றத்துடன் உடல் தளர்ந்து காணப்படுவார்கள். இவர்கள் கீழாநெல்லி, ஓரிதழ்தாமரை ஆகியவற்றின் முழுச்செடியும் சமஅளவில் அரைத்து நெல்லிக்காய் அளவில் அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட இளமை பருவத்தில் ஏற்பட்ட முதுமையை நீக்கும்.

அரிசி கழுவிய கழுநீரில் வேரை அரைத்து கலக்கி பெரும்பாடு ஏற்படும் பெண்கள் 200 மிலி அளவில் குடித்து வந்தால் பெரும்பாடு பிரச்சனை தீரும்.

முற்றிய காமாலை நோய் உள்ளவர்களுக்கு வேரை பச்சையாக அரைத்து 17 கிராம் அளவில் பாலில் கலந்து கொடுத்தால் காமாலை போகும்.

கீழாநெல்லி, மூக்கிரட்டை, பொன்னாங்கண்ணி ஆகியவற்றை சமஅளவில் அரைத்து அதில் கழற்சிக்காய் அளவு மோரில் கலந்து 45 நாட்கள் குடித்துவர மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து பிரச்னைகள் நீங்கும்.

நல்லெண்ணெய் யில் 200மிலி கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்கு 9 கிராம் சேர்த்து பசும்பால் விட்டு அரைத்து கலக்கி காய்ச்சி வைத்து கொண்டு தலை முழுகிவர நலம் பயக்கும்.

கீழாநெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஒரே அளவாக எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி சடசடப்பு அடங்கியதும் வடித்து வைத்து கொண்டு வாரம் இரண்டு முறை தலை முழுகி வர பார்வைக்கோளாறு அனைத்தும் நீங்கும்.

கீழாநெல்லி தைலத்தால் வாரம் இரண்டு முறை தலைமுழுகி வந்தால் உட்சுரம், வெப்பம், கை, கால், கண் எரிச்சல், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி ஆகியவை தீரும்.பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் நொந்து மெலிந்தவர்களுக்கு கீழாநெல்லியை அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து நாள்தோறும் குடித்து வர உடல் தேறும். கற்ப முறைப்படி குடித்து வந்தால் பித்த நோய்கள் அனைத்தும் போகும். இதைத்தான்

பார்க்கும் இடங்கள் தோறும் முளைத்து இருப்பதால் வேண்டாத செடி என ஒதுக்கிடாமல் மனித வாழ்வை நலமாக்க இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்று உணர்ந்து அதை முறைப்படி பயன்படுத்தி நலமுடன் வாழ்ந்த நமது முன்னோர்கள் காட்டிய வழியில் நாமும் நலமுடன் வாழ்வோம்.