Less Cost More Energy(Tamil)

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் – படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு….!

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்…!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

Less cost More Energy

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்….!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா – உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், ‘சிலந்திவலை சிக்கலில் எனது நாடு’ என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

“படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன்.

அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை” என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, ‘வில்லேஜ் விஞ்ஞானி’யின் தற்போதைய கண்டு பிடிப்பு நவீன காற்றாலை மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, ‘கொடிசியா’வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், “இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு

நிதி ஆதாரம் வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல.

அதே மாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

(Visited 21 times, 1 visits today)
About Haja

Software Engineer by profession, Author and the Founder of "bench3" you can connect with me on Twitter , Facebook and also on Google+

Speak Your Mind

*