தைராய்டு சுரப்பி எங்குள்ளது அதன் பணிகள் என்ன?

கழுத்துப்பகுதியில் உள்ள நாளமில்லாச் சுரப்பிகளுள் ஒன்று. இது அதிகம் அல்லது குறைந்து வேலை செய்தால் சிக்கல் தான்.இதிலிருந்து சுரக்கிற தைராக்ஸின் என்ற ஹார்மோன் நீர் நமது உடல் வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கிறது. ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறவும் இதுதான் உதவுகிறது.

thyroid

தைராய்டு நோய்க்கு என்ன காரணம்?

நிறைய காரணங்கள் இருக்கிறது. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் காரணமாகின்றன. நம் பெற்றோர்கள் யாருக்காவது இந்த நோய் இருந்தால் அதுவும் நம்மைத் தொடர்ந்து தாக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே சர்க்கரை நோயைப் பரிசோதித்து அறிந்து கொள்வதுபோல இதையும் பரிசோதித்து தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது.

இளம் வயதில் புற்றுநோய் தாக்கி கதிரியக்க சிகிச்சை பெற்றிருந்தால் நாளடைவில் தைராய்டு பாதிப்புகள் வரலாம். குறிப்பாக நம் உணவில் அயோடின் குறைவைக்கூட ஒரு காரணமாகச் சொல்லலாம்.

காரணமில்லாமல் கோபம் வருவது ஏன் டாக்டர்? அதற்கும் தைராய்டு பாதிப்பிற்கும் என்ன தொடர்பு?

ஹைபர் தைராய்டு என்கின்ற தைராய்டு அதிகமாக சுரப்பதால்தான் காரணம் இல்லாத கோபம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் தைராய்டுக்கான தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோயை குணப்படுத்தி விடலாம்.

தைராய்டு பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தானே?

தைராய்டு பிரச்சினை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் அதிக அளவில் பெண்களுக்கே வரும். சிறுமி முதல் மூதாட்டி வரை வர வாய்ப்புண்டு. தைராய்டு பாதிப்பிற்கு இதுதான் காரணமென்று துல்லியமாக இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் உணவில் அயோடின் சத்து குறைவாக இருப்பது, பரம்பரையாக வருவது, சிலவகை தொற்று நோய் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டு வருகின்றன. பெண்கள் மட்டும் இந்தப் பாதிப்பு அதிகம் தாக்க அவர்களின் உடல் அமைப்பும் பெண்களுக்கு மட்டும் சுரக்கின்ற பிரத்தியேகமான சில ஹார்மோன்கள்தான் காரணம்.

தைராய்டு சுரப்பி குறைபாடுகளினால் என்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

தைராய்டு சுரப்பியில் இரண்டு வகையான குறைபாடுகள் ஏற்படலாம்.

1. குறைவாக தைராய்டு சுரப்பது. இதற்கு ஹைபோ தைராய்டு என்று பெயர்.

2. அதிகமாக தைராய்டு சுரப்பது இதற்கு ஹைபர் தைராய்டு என்று பெயர்.

ஹைபோ தைராய்டு காரணமாக காய்ட்டர் என்றழைக்கப்படுகின்ற வீக்கம் ஏற்படும். முடி கொட்டுதல், பசியின்மை, எடை அதிகரித்தல், கர்ப்பம் தரிக்க முடியாமை, உடலில் அசாத்தியமான சோர்வு, அசதி, மந்த நிலை போன்றவை இருக்கும்.
ஹைபர் தைராய்டு காரணமாக படபடப்பு, நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும்.

கை காலில் நடுக்கம், டயரியா, லூஸ் மோஷன், மாதவிலக்கு தொந்தரவு, கால் வீக்கம், ஞாபக சக்தி குறைதல், கடுமையான பசி, கோபம் வருதல், முடி கொட்டுதல், கர்ப்பம் தரிக்க முடியாமை, அளவிற்கு அதிகமான உடம்பு வலி போன்றவை இருக்கும். இரண்டு வகை தைராய்டு கோளாறுகளில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரக்கின்ற குறைபாடுதான் மிக அதிக அளவில் மக்களிடம் உள்ளது.