108 ஆம்புலன்ஸ் தொடர்புக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு:

விபத்துகளை தடுக்க அரசு மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும், குறையவில்லை. இதனால், அரசு சார்பில் 108 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், இந்த 108 ஆம்புலன்சுக்கான எண்ணுக்கு தொடர்பு கொண்டால், சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வருவதில்லை. சில நேரங்களில் தாமதம் ஆகிறது. இதனாலும் உயிர்ப்பலி அதிகரிக்கிறது.

108

இதற்கு காரணம், 108 எண்ணுக்கு தொடர்பு கொண்டால், சென்னையில் உள்ள தலைமை இடத்துக்கு செல்லும். பின்னர், அங்கிருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகம் சென்று,

பிறகு ஆம்புலன்ஸ் டிரைவர் அல்லது ஆம்புலன்சில் உள்ள மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன்பின்னர், அந்த குழுவினர் செல்வார்கள்.

இதற்கு குறைந்தது 1 முதல் 3 மணிநேரம் ஆகிறது.இதுபோன்ற சிரமங்களை தவிர்த்து, புகார் தெரிவித்த சில நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு சென்று, விபத்தில் சிக்கியவரை மீட்டு சிகிச்சை அளிக்கவும்,

உயிரை காப்பாற்றும் விதமாக கம்பியில்லா கருவி ஒன்றை காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு காவல் படையில் பணிபுரியும் உத்திரமேரூர் ஒன்றியம், மலையான்குளம் கிராமத்தை சேர்ந்த பாரத் (23) என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 உள்பட தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 800 செயல்படுகிறது. இந்த வாகனங்களில் நான் கண்டுபிடித்துள்ள கருவியை பொருத்தினால், விபத்து நடந்த பகுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

இதற்காக ஒரு சிறிய அறை இருந்தால் போதும். அரசு மருத்துவமனையில் ஒரு அறையை ஒதுக்கி கொடுத்தாலும் சரிதான்.

இந்த கருவியின் விலை ரூ.500ல் அடக்கமாகும். கருவியின் விலை ரூ.400, ஸ்பீக்கர் ரூ.100 மட்டுமே. இந்த கருவி மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும்போது 2 நொடிகள் எச்சரிக்கை மணி எழுப்பும்.

அதை யாரும் எடுக்காத பட்சத்தில், பொதுமக்களின் புகார், பதிவு செய்யப்பட்டு, உடனடியாக ஆம்புலன்சில் உள்ள கருவியில் ஒலிக்கும். இதை வைத்து, சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டவரை மீட்கலாம்.

உயிரிழப்பை தடுக்கலாம்.அதேபோல் சம்பந்தம் இல்லாமல் சிலர், 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து, மருத்துவ குழுவினரின் நேரத்தை வீணடிப்பார்கள். அதுபோன்ற சம்பவங்களை தடுப்பதுடன், அவர்களை பிடித்து எச்சரிக்கவும் செய்யலாம்.

மேலும் மின்வாரியத்துக்கான புகார், தீயணைப்பு நிலையத்துக்கான புகார்களையும் இந்த கருவி மூலம் அறிந்து கொள்ளலாம். இந்த கருவியை பயன்படுத்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், எனக்கு வாய்ப்பு அளித்தால், இந்த கருவியை இலவசமாக பொருத்துவேன்.இவ்வாறு கூறினார்.